28 September 2011

நேபாள விமான விபத்தில் பலியான 8 பேர் உடல்கள் திருச்சி வந்தது : பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி !




நேபாள விமான விபத்தில் பலியான கட்டுநர் சங்க நிர்வாகிகள் 8 பேரின் உடல்களும் இன்று காலை திருச்சி கொண்டு வரப்பட்டது.
அவர்களது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாலையில் இறுதிச் சடங்குகள் நடக்கிறது.
அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 23-ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்கச் சென்றிருந்த இந்திய கட்டுநர் சங்கத்தின் திருச்சி கிளை தலைவர் மணிமாறன் (58), நிர்வாகிகள் மருதாசலம் (68), தியாகராஜன் (48), தனசேகரன் (44), கிருஷ்ணன் (72), மீனாட்சி சுந்தரம் (50), மகாலிங்கம் (55), கனகசபேசன் (70) ஆகிய 8 பேர், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர். 
எவரஸ்ட் சிகரத்ப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது நடந்த விமான விபத்தில் இவர்கள் 8 பேர் உள்பட 19 பேர் பலியாயினர். இவர்களது உடல்கள், நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை எடுத்து வரப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 4 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடல்கள் ஏற்றப்பட்டு இன்று காலை 7.10 மணிக்கு திருச்சி கொண்டு வரப்பட்டது.




தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், பொது மக்கள் அஞ்சலிக்காக உடல்கள் வைக்கப்பட்டன. 
கட்டுமான தொழிலாளர்கள், உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று 8 பேரின் உடல்களுக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் சிவபதி, எம்.பி. குமார், எம்எல்ஏ மனோகரன், மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வேலு, செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் சேகரன், பரணிகுமார், பா.ஜ. மாநகர செயலாளர் பார்த்திபன், தேமுதிக மாநகர செயலாளர் விஜயராஜன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
காலை 8.30 மணி அளவில் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்குகள் அவரவர் வீட்டில் இன்று மாலை நடக்கிறது.

No comments:

Post a Comment