17 August 2011

சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா?

சின்ன வயதிலிருந்தே சிவில் இஞ்சினியர் ஆகிவிட வேண்டும் என்கிற கனவெல்லாம் எனக்கில்லை.
ஆர்.எஸ்.கே.யில் படிக்கும்போதெல்லாம் எப்படியாவது ஐ.ஏ.எஸ். ஆகிவிட்டால் பரவாயில்லை என்றுதான் அடிக்கடி நினைக்கத் தோன்றியது.
ஆனால்... அதையும் படித்துவிட்டு-- ஆன்னா ஆவன்னா தெரியாத மந்திரிக்கெல்லாம் கார் கதவைத் திறந்துவிடுகிற கொடுமையை நினைத்தால்..... அதன்மீது வெறுப்புத்தான் வந்தது..
இதுமட்டும் என்ன யோக்கியமா? என்று கேட்கத் தோன்றும். பொதுப்பணித்துறைக்குப் போனால் இதுவும் அப்படித்தான்.
அக்கரைக்கு இக்கரைப் பச்சை... அவ்வளவுதான்.


நாம்தான் சிவில் சிவில் என்கிறோம். பறவைகள் என்ன இஞ்சினியருக்குப் படித்துவிட்டு வந்தா வீடு(கூடு?) கட்டுகின்றன?   கூடு கட்டுவதில் பறவைகளுக்கு உள்ள அறிவு நம்மை என்னமாய் வியக்க வைக்கிறது !
உடைந்த குச்சிகளைப் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துவந்து, ஒரு அழகான வீட்டை .காகம் எப்படியெல்லாம் கட்டுகிறது? சில சமயங்களில் காப்பர் கம்பிகளைக்கூட எடுத்து வந்து வளைத்து வளைத்து வலுவான கூடுகள் கட்டுமாம்.. காக்காவின் கூடு வடிவத்தில் ஒரு ஸ்டேடியமே ஜப்பானில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கரையான்களும், தேனிக்களும் வீடு கட்டுவதில் பட்டம் வாங்காத சிவில் இஞ்சினியர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். கரையான்கள் வீடு கட்டுவதோடு மட்டும் தன்னுடைய வேலையை முடித்துக் கொள்வதில்லை. கட்டி முடித்த பிறகு அதற்கு "ஏர் கண்டிஷனிங்க்" கும் செய்கின்றன.  எந்தக் காற்றுக்கும், எந்த மழைக்கும் அந்த வீடு இடிந்துவிடுவதில்லை. கலவைக்கு உண்டான காம்பினேஷனைக் கரெக்டாகப் போட்டு வீடு கட்டுவதில் கொத்தனாரை விடக் கரையான்கள் எக்ஸ்பர்ட். ஆனால்...   அப்படியெல்லாம் வசதி வாய்ப்போடு வீட்டைக் கட்டிமுடித்துவிட்டு  "ஹாயாக" ரெஸ்ட் எடுக்கலாம் எனத் துணை தேடும்போதுதான்.... நமது பாம்புக்கார அண்ணாச்சி ஆளும்கட்சி அரசியல்வாதி மாதிரி வந்து அந்த வீட்டைத் தனதுபெயருக்குப் பட்டா மாற்றிகொள்வார்.
பறவைகளில் தூக்கனாங் குருவியைப் போல மிகமிக நுட்பமாகக் கூடு யாராலும் முடியாது. மெல்லிய நார்கள் மட்டும்தான் அதற்கு சிமெண்ட் செங்கல் எல்லாமே. மெல்லிய நார்களினால் பின்னப்பட்ட கூடு காற்றில் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது. அந்தக் கூட்டுக்குள்ளேதான் எத்தனை ஆரோக்கியமான அறைகள். முட்டையிட்டு அடைக்காப்பதற்கு என ஒரு தனியறை, முன் வாயிலறை, ஆண் குருவிக்கு என்று தனியாக அறை..... சரி, இவ்வளவு வசதிகளோடு கூட்டைக் கட்டிவிட்டு மின்விளக்கு வசதி இல்லாவிட்டால் எப்படி?  அதற்காக மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து கூட்டினுள் ஒட்டி வைத்து விடும். இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள் ரெடி. கரண்டு பில்லும் கிடையாது. 


அதேமாதிரிதான்... சிலந்திகளும் சிட்டுக்குருவிகளும் கூட! அவைகள் என்ன சிவில் இஞ்சினியரிங் முடித்துவிட்டு வந்தா தங்களுக்கு வீடுகட்ட ஆரம்பித்தன?  நம்மை மாதிரி  வசதியான பிளாட் தேடியா அலைகின்றன? வீட்டின் முகடோ, மரத்தின் கிளையோ... எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்துக்குத் தகுந்த மாதிரி எவ்வளவு சாதுர்யமாக டிசைன் போட்டுக் கட்டிமுடித்து விடுகின்றன?


படிப்பிலிருந்து மட்டுமல்ல.... பறவைகளிடமிருந்தும் நாம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது!                    --U.Prithvi...

No comments:

Post a Comment