நேபாள விமான விபத்தில் பலியான கட்டுநர் சங்க நிர்வாகிகள் 8 பேரின் உடல்களும் இன்று காலை திருச்சி கொண்டு வரப்பட்டது.
அவர்களது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாலையில் இறுதிச் சடங்குகள் நடக்கிறது.
அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 23-ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்கச் சென்றிருந்த இந்திய கட்டுநர் சங்கத்தின் திருச்சி கிளை தலைவர் மணிமாறன் (58), நிர்வாகிகள் மருதாசலம் (68), தியாகராஜன் (48), தனசேகரன் (44), கிருஷ்ணன் (72), மீனாட்சி சுந்தரம் (50), மகாலிங்கம் (55), கனகசபேசன் (70) ஆகிய 8 பேர், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர்.
எவரஸ்ட் சிகரத்ப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது நடந்த விமான விபத்தில் இவர்கள் 8 பேர் உள்பட 19 பேர் பலியாயினர். இவர்களது உடல்கள், நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை எடுத்து வரப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 4 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடல்கள் ஏற்றப்பட்டு இன்று காலை 7.10 மணிக்கு திருச்சி கொண்டு வரப்பட்டது.
தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், பொது மக்கள் அஞ்சலிக்காக உடல்கள் வைக்கப்பட்டன.
கட்டுமான தொழிலாளர்கள், உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று 8 பேரின் உடல்களுக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் சிவபதி, எம்.பி. குமார், எம்எல்ஏ மனோகரன், மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வேலு, செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் சேகரன், பரணிகுமார், பா.ஜ. மாநகர செயலாளர் பார்த்திபன், தேமுதிக மாநகர செயலாளர் விஜயராஜன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
காலை 8.30 மணி அளவில் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்குகள் அவரவர் வீட்டில் இன்று மாலை நடக்கிறது.
நேபாளத்தில் விமான விபத்து, 19 பேர் பலி என்று முதலில் செய்தி வந்தபோது….. வழக்கமான வலியும் வருத்தமுமே மிஞ்சி நின்றது.
ஆனால், அதற்குப் பிறகு…..
அவர்கள் அனைவருமே நம் ஊர்க்காரர்கள் என்று அடையாளம் காணப்பட்டபிறகு வலி இரட்டிப்பானது.
என்ன ஒரு கொடுமையான செய்தி? தில்லைநகர் மட்டுமல்ல, திருச்சியே இன்னும் அந்த வலியிலிருந்து மீளமுடியாத நிலை.
நேபாளத்தில் உள்ள “புத்தா ஏர்’ என்ற தனியார் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான, பி.ஹெச்.ஏ. 103 என்ற சிறிய ரக விமானத்தில் 19 சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பயணித்தனர்.
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதை ஒட்டிய சிகரங்களையும், மலையழகையும் சுற்றிப் பார்க்க இவர்கள் சென்றனர்.
இந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது, காலை 7.30 மணியளவில், கோதண்ட மலையில் மோதி விமானம் வெடித்துச் சிதறியது.
விமான நிலையத் தொடர்பு அறையுடன் தொடர்பை இழந்த சில மணித்துளிகளில், விமானம் விபத்துக்குள்ளானது.
வெடிப்பதற்கு முன்பாக விமானம் பற்றி எரிந்ததாக உள்ளூர் தொலைக்காட்சிகள் தெரிவித்தன.
விபத்து நடந்த இடம் தலைநகர் காத்மாண்டுவுக்கு கிழக்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணு நாராயணர் கோயிலுக்கு அருகில் உள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 19 பேரும் உயிரிழந்தனர். இதில் 10 இந்தியர்கள், 2 அமெரிக்கர்கள் , ஒரு ஜப்பானியர் உள்ளிட்ட 13 வெளிநாட்டினர் அடங்குவர். 3 நேபாள நாட்டவர்களும், 3 விமான ஊழியர்களும் உயிரிழந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், காத்மாண்டுவில் இருந்து ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் அங்கு வந்து சிதறிக் கிடந்த உடல்களை மீட்டிருக்கின்றனர்.
விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் உருக்குலைந்து இருந்ததால், உடனடியாக அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்தான், இறந்தவர்களில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்த கட்டுனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் எனத் தெரியவந்திருக்கிறது.
அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 23ம் தேதி நடந்தது. இந்திய கட்டுநர் சங்கத்தின் திருச்சி கிளைத் தலைவர் இன்ஜினியர் மணிமாறன் (58), ரோகினி பில்டர்ஸ் உரிமையாளர் இன்ஜினியர் மருதாசலம் (68), ஜோதி பைல் பவுன்டேசன் உரிமையாளர் தியாகராஜன் (48), மெர்க்குரி பில்டர்ஸ் உரிமையாளர் தனசேகரன் (44), பாலக்கரை மாரியப்பா ஜவுளி கடை உரிமையாளர் கிருஷ்ணன் (72), மீனா பிராபர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் (50), கான்ட்ராக்டர் காட்டூர் மகாலிங்கம் (55), கட்டிட மதிப்பீட்டாளர் இன்ஜினியர் கனகசபேசன் (70) உள்பட 12 பேர் டெல்லி பொதுக்குழுவில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின் 4 பேர் மட்டும் அங்கிருந்து திருச்சி திரும்பிவிட்டனர். மற்ற 8 பேரும் டெல்லியில் தங்கி இருந்து நேபாளத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போதுதான் இந்தக் கோரவிபத்து நடந்துவிட்டது.
விபத்தில் இறந்த 8 பேரின் உடல்களும் உருக்குலைந்து இருப்பதால், அவர்களை அடையாளம் கண்டு திருச்சி கொண்டு வர முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் திருச்சி எம்.பி.குமார் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் என 10 பேர் காத்மாண்டு சென்றுள்ளனர். (தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவும் உடன் இணந்து ஆவண செய்து வருகிறார்).
இறந்தவர்களில் 4 பேரின் சட்டை பாக்கெட்டில் வாக்காளர் அடையாள அட்டை இருந்ததால் சுலபமாக அவர்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டனர். மற்ற 4 பேரை அவரது உறவினர்கள் அடையாளம் காண்பார்கள். இன்றிரவே உடல்கள் டெல்லி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து நாளை திருச்சிக்குக் கொண்டுவரப்படும் என்றும், 8 பேரின் உடல்களும் திருச்சி தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும்பொருட்டு 2 மணி நேரம் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில்….. ஒட்டுமொத்தமாக எட்டுப்பேரைப் பறிகொடுக்க வைத்து, கட்டுனர்கள் சங்கத்தையே கலகலத்துப் போகவைத்துவிட்ட காலனை எவ்வகையிலும் மன்னிக்கமுடியாது.
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?